சர்வதேச அளவில் உருவெடுக்கும் கோவை: ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் என வரவேற்பு!
கோவையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'கோயம்புத்தூர் ஃபின்டெக் ஹப்' (Coimbatore FinTech Hub) எனும் மாபெரும் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ் மனமார்ந்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்து உள்ளார்.
ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையம்:
கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பாக ரூ.400 கோடி மதிப்பீட்டில் "Coimbatore FinTech Hub" அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்து இருந்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திலான அலுவலகச் சூழல், நிதிநுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கான (Startups) சிறப்பு வசதிகள், நவீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வகங்கள், மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளன.
எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் அறிக்கை:
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தத் திட்டம் உலகளாவிய முதலீடுகளை கோவைக்கு ஈர்ப்பதற்கும், நிதி நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், நமது பகுதி இளைஞர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
தொழில், தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்கனவே முன்னணி நகரமாகத் திகழும் கோயம்புத்தூர், இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய FinTech மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் கவனம் பெறும் தொழில்நுட்ப நகரமாகவும் மேலும் உயர்வடையும்.
கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கான பொருளாதார வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு உள்ள இந்த சிறப்புமிக்க திட்டத்தைக் கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் சார்பிலும், கோவை மக்களின் சார்பிலும் மனதார வரவேற்கிறேன்.
இத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: