சனி, 22 ஆகஸ்ட், 2026

உரிய அனுமதியின்றி இயங்கி வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட உத்தரவு !

SHARE

 உரிய அனுமதியின்றி இயங்கி வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட உத்தரவு !

ஆனைகட்டி, வீரபாண்டி கிராமத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூடும்படி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம், ஆனைகட்டி வனப்பகுதியில் செயல்பட்டு வரும் சட்டவிரோத தனியார் தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவற்றை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுற்றுச்சூழல் வனம், வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, ஆனைக்கட்டி பகுதியில் இயங்கி வரும் சட்ட விரோத தனியார் தங்கும் விடுதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்தக் குழுவில், மாவட்ட வனத்துறை அதிகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த வட்டாட்சியர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவின் அறிக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (ஆகஸ்ட் 21) தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆனைகட்டி பகுதியில் உள்ள வீரபாண்டி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, மொத்தம் 10 தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. அவற்றில் 2 விடுதிகள் கடந்த மாதம் முதல் உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வருவதாகவும், 8 தங்கும் விடுதிகள் எவ்வித அனுமதியும் பெறவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அனுமதி பெறாமல் ஆனைக்கட்டி, வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட வேண்டும்" என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

மேலும், அனுமதி பெற்றுள்ள இரு விடுதிகளின் உரிமங்களை ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: