சனி, 22 ஆகஸ்ட், 2026

"உன் பொண்டாட்டி எப்படி எங்கள் தடத்தில் (பாதையில்) வரலாம் ?" - கோவையில் விவசாயி வீட்டை அடித்து நொறுக்கிப் பெட்ரோல் ஊற்றிக் காரைக் கொளுத்திய போதை ஆசாமி - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்!

SHARE

 "உன் பொண்டாட்டி எப்படி எங்கள் தடத்தில் (பாதையில்) வரலாம் ?" - கோவையில் விவசாயி வீட்டை அடித்து நொறுக்கிப் பெட்ரோல் ஊற்றிக் காரைக் கொளுத்திய போதை ஆசாமி - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்!

 கோவை மாவட்டம், சூலூர் அருகே நிலத் தகராறு காரணமாக விவசாயி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, ₹ 10 லட்சம் மதிப்பிலான புதிய காரின் மீது பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்திய நபரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை ஒன்றியம் பூரண்டாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதியப்பன். விவசாயியான இவருக்குத் தேவி என்ற மனைவியும், ஒரு வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணபதியப்பனின் தந்தை சமீபத்தில் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில், வழக்குச் சம்பந்தமாகச் செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்திற்குச் சென்று உள்ளார்.

​அப்போது வீட்டில் தேவி மற்றும் அவரது குழந்தைகள் மட்டுமே இருந்து உள்ளனர். குழந்தைகள் தூங்கிய நேரத்தில், தேவி அருகில் இருந்த மணி என்பவரது தோட்டத்துப் பாதை வழியாகத் தனது தனது தோட்டத்தைப் பார்க்கச் சென்று விட்டுத் திரும்பி உள்ளார். 

இதைப் பார்த்த மணியின் மகன் ராஜ கணேஷ், தேவியிடம் "எங்கள் தோட்டம் வழியாக எதற்குச் செல்கிறாய் ?" எனக் கேட்டுத் திட்டி உள்ளார். 

மாலை வீடு திரும்பிய கணபதியப்பனிடம் தேவி இச்சம்பவம் குறித்துக் கூறி உள்ளார். உடனே கணபதியப்பன், மணி வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டு விட்டு வந்து உள்ளார்.

இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த மணி, அன்று இரவு 8 மணி அளவில் கடுமையான மதுபோதையில் இரண்டு ஆட்களுடன் கையில் மண்வெட்டியுடன், கணபதியப்பன் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

 "உன் பொண்டாட்டி எப்படி எங்க தோட்டத்துக்கு வரலாம் ?" எனக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, கணபதியப்பனை மண்வெட்டியால் தாக்க முயன்று உள்ளார்.

​உடனடியாக கணபதியப்பன் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொள்ளவே, ஆத்திரம் அடைந்த அடியாட்கள் கற்கள் மற்றும் கட்டைகளால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

இதன் தொடர்ச்சியாக, இரவு 10 மணி அளவில் மணியின் மகன் ராஜ கணேஷ் 5 லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உள்ளார். வீட்டின் மின்சார இணைப்பு பெட்டிக்குத் தீயிட்டதோடு, வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த கணபதியப்பனின் காரின் மீதும் பெட்ரோலை ஊற்றித் தீய வைத்து உள்ளார். 

இதில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் ₹10 லட்சம் கொடுத்து வாங்கிய புதிய கார் எரிந்து சேதமடைந்து உள்ளது.

​இச்சம்பவம் குறித்துக் கணபதியப்பன் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அங்கு உள்ள சி.சி.டி.வி  காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நள்ளிரவில் போதை ஆசாமி ரகளை ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: