வியாழன், 13 ஆகஸ்ட், 2026

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

SHARE

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவர்கள் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் புழு இருந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், உணவின் தரம் மற்றும் விடுதி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி, இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, மாணவர்களின் புகாரைத் தொடர்ந்து உணவின் தரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து விடுதி மற்றும் உணவு தயாரிக்கப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு தயாரிக்கும் முறை, சுகாதார நிலை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, கல்லூரிக்கு நாளை மதியம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: