மதில் சுவரில் ஏறிக் குதித்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை : கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை !!!
நாயின் அலறல் சத்தத்தால் தப்பிய அசம்பாவிதம் ; கண்காணிப்பு கேமராவில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் வைரல் !!!
கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அண்ணா நகர் பகுதியில் நள்ளிரவில் மதில் சுவரில் ஏறிக் குதித்து குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை நகர்ப் பகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர் ராமர் கோயில் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ரகசியமாக ஊருக்குள் புகுந்து உள்ளது.
அங்கே உள்ள குடியிருப்புவாசியான மதிவதனம் என்பவரது வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள் நுழைந்த அந்தச் சிறுத்தை, அங்கு கட்டப்பட்டு இருந்த நாயைப் பிடித்து வேட்டையாட முயன்று உள்ளது.
அப்போது ஆபத்தை உணர்ந்த நாய் பயத்தில் பலத்த சத்தமிட்டு அலறி உள்ளது. நாயின் தொடர் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த குடும்பத்தினரும் அக்கம், பக்கத்து பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்து உள்ளனர்.
பொதுமக்கள் ஒன்று கூடிச் சத்தமிட்டுச் சிறுத்தையை விரட்ட முற்பட்டனர். ஆட்களின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுத்தை, உடனடியாக வீட்டின் உயர்ந்த மதில் சுவர் மீது ஒரே தாவலாக ஏறிக் குதித்து, நள்ளிரவு இருளுக்குள் அதிவேகமாக ஓடி மறைந்தது.
குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலா வந்ததும், மதில் சுவரில் சுலபமாக ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றதும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) அப்பட்டமாகப் பதிவாகி உள்ளது.
இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை உலா வருவதால், இரவு நேரங்களில் வெளியே நடமாடவே பொதுமக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் இந்தச் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: