"போதையில் பயணி மடியில் அமர்ந்து ரகளை" ; கோவை அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பிடிபட்ட ஆசாமி!
டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கி அபராதம் செலுத்திய அவலம் : கோவை காந்திபுரம் பேருந்தில் பரபரப்பு!
கோவையில், மதுபோதையில் அரசுப் பேருந்தில் ஏறிய நபர் ஒருவர், சக பயணியின் மடியில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டதுடன், டிக்கெட் எடுக்காமல் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கி அபராதம் செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பயணி மடியில் அமர்ந்து ரகளை:
கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்குத் தினமும் நூற்றுக் கணக்கான நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் TN 38 N 3657 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து காந்திபுரத்தில் இருந்து இடையர்பாளையம் மற்றும் வெள்ளலூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.00 மணி அளவில் உக்கடத்தில் இருந்து காந்திபுரம் நோக்கி அந்தப் பேருந்து வந்து கொண்டு இருந்தது. கே.ஜி. மருத்துவமனை நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட போது, நிலைகொள்ளாத அளவுக்குக் கடும் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்தில் ஏறி உள்ளார்.
நிற்க முடியாமல் தவாளித்த அந்த நபர், திடீரெனப் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த மற்றொரு பயணியின் மீது அமர முயன்று உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது.
அந்த குறிப்பிட்ட பயணி அரசு பாலிடெக்னிக் நிறுத்தத்தில் இறங்கியதும், காலியான அந்த இருக்கையில் அமர்ந்த போதை ஆசாமி, அடுத்து அருகில் இருந்த மற்றொரு பயணியிடமும் தேவையற்ற முறையில் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
டிக்கெட் எடுக்காமல் சிக்கிய அவலம்:
பேருந்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தைச் சென்று அடைந்ததும், அங்கு இருந்த டிக்கெட் பரிசோதகர்கள் (Ticket Inspectors) பேருந்துக்குள் ஏறிப் பயணிகளின் டிக்கெட்டுகளைப் பரிசோதித்தனர்.
அப்போது, டிக்கெட் பரிசோதகரிடம் தான் டிக்கெட் வைத்து இருப்பது போலக் காட்டிய அந்த நபர், நிற்கக்கூட முடியாமல் தனது பாக்கெட்டுகளில் பல நிமிடங்கள் டிக்கெட்டைத் தேடுவது போல் நடித்து நாடகமாடி உள்ளார்.
இறுதியில் அவர் டிக்கெட் எடுக்காதது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டிக்கெட் பரிசோதகர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்து அபராதம் விதித்தனர். வேறு வழியின்றி அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு அந்த போதை ஆசாமி பேருந்தை விட்டு இறங்கிச் சென்றார்.
அரசுப் பேருந்தில் போதை ஆசாமியின் இந்தச் செயல் சக பயணிகள் இடையே பெரும் முகம்சுளிப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்: