30 நிமிடங்களில் மலைவாசஸ்தலங்களுக்குப் பயணம்: ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலைக்கும் விரிவாக்கத் திட்டம்!
மதுரை விமான, நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து கொடைக்கானல் மற்றும் கோயம்புத்தூருக்கு ஹெலிகாப்டர் சேவைக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.
தென்னகப் பகுதியில் சுற்றுலா, ஆன்மீகப் பயணம், மருத்துவ அவசரத் தேவை மற்றும் தொழில்முறைப் பயணங்களை வேகப்படுத்தும் நோக்கில் தனியார் விமான நிறுவனம் தனது புதிய ஹெலிகாப்டர் தளத்தை மதுரை விமான நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைத்து உள்ளது.
இதன் முதற்கட்டமாக, மதுரையில் இருந்து கொடைக்கானல் மற்றும் கொடைக்கானல் இருந்து கோவை ஆகிய வழித்தடங்களில் ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
வழக்கமாக மதுரையில் இருந்து கொடைக்கானல் அல்லது கோவைக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல பல மணி நேரம் ஆகும் நிலையில், இந்த ஹெலிகாப்டர் சேவை மூலம் வெறும் 30 நிமிடங்களில் இலக்கை அடைய முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இதில் 5 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடியும் என்றும், அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்க அனுமதி பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை, கோவை, கொடைக்கானல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ள நிலையில், அடுத்தகட்டமாகத் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களான கொல்லிமலை, ஏற்காடு மற்றும் ஏலகிரி ஆகிய மலைப் பகுதிகளுக்கும் ஹெலிகாப்டர் சேவைகளுக்கான சோதனை ஓட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: