இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!
கோவை மாவட்டம், வால்பாறை அருகே சாலை தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று எவ்வித அச்சமுமின்றி படுத்து இளைப்பாறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், வனத்துறையினர் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சிறுத்தைகள் உணவிற்காகவும் தங்களின் இருப்பிடத்தை மாற்றவும் அடிக்கடி வீதிகளுக்கு வரத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை-அய்யர்பாடி பகுதியில் நள்ளிரவில் வாகனத்தில் சென்றவர்கள், வீதியோரத் தடுப்புச் சுவரின் மேல் சிறுத்தை ஒன்று எவ்வித பதற்றமுமின்றி அமைதியாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.
வாகனத்தின் வெளிச்சம் பட்ட போதும் சிறுத்தை மிரளாமல், சுவரின் மீது ஹாயாக இளைப்பாறிய இந்த அரிய காட்சியை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வேகமாகப் பரவி வருகிறது.
மலைப் பாதைகளில் சிறுத்தை போன்ற ஆபத்தான வனவிலங்குகளின் நடமாட்டம் இரவில் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தடுப்புச் சுவர்கள் அல்லது வன எல்லைப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி நிழற்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

0 கருத்துகள்: