திங்கள், 31 ஆகஸ்ட், 2026

"யாசகம் கேட்பதை மாற்றுவேன்" ; சாதனை படைக்கும் கோவையின் முதல் திருநங்கை பேருந்து நடத்துநர் விநோதினி!

SHARE

5-ம் எண் பேருந்தில் அசத்தும் பழனி பெண்: பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ஓட்டுநர் மற்றும் பயணிகள் கோரிக்கை!

 வாழ்க்கையில் எத்தனை எதிர்பாராத திருப்பங்கள் வந்தாலும், தனது கனவைக் கைவிடாமல் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்குச் சான்றாக, கோவையின் முதல் திருநங்கை பேருந்து நடத்துநராக வலம் வரும் விநோதினியின் தன்னம்பிக்கைப் பயணம் அமைந்து இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் விநோதினி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், அதன் பிறகு தனது பாலின அடையாளத்தை வெளிப்படுத்தித் திருநங்கையாகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். சமூகத்தின் புறக்கணிப்புகளையும் பல சவால்களையும் எதிர்கொண்ட இவர், சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.

​கோவையில் சமையல் வேலை, வாகன ஓட்டுநர் வேலை என கிடைத்த பணிகளைச் செய்து பிழைத்து வந்த விநோதினியின் மனதில், அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவு உருவானது. அந்தக் கனவை நனவாக்கப் போராடிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடத்துநர் உரிமம் பெற்றார்.

​அவரது விடா முயற்சிக்குப் பலனாக, கடந்த மாதம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளராக வேலை கிடைத்தது. இதன் மூலம் கோவையின் முதல் திருநங்கை நடத்துநர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்று உள்ளார்.

தற்போது கோவை, ராமநாதபுரம் - காந்திபுரம் - சிவானந்தா காலனி  இடையே இயங்கி வரும் பிரபல 5-ம் எண் பேருந்தில் விநோதினி நடத்துநராகப் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசும் விநோதினி,

 "வாழ்க்கையில் பல கஷ்டங்களைச் சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். திருநங்கைகள் என்றால் சாலையோரங்களில் யாசகம் கேட்பவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்து இருக்கிறது. பேருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் என் மீது கனிவு காட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்து ஊக்கப்படுத்துகின்றனர்" எனக் கூறினார்.

விநோதினிக்கு அனைவரும் ஆதரவளிப்பதாகக் கூறும் பேருந்து ஓட்டுநர் சுரேஷ், அவரது விடாமுயற்சியைப் பாராட்டி அவருக்கு அரசுப் பணியை நிரந்தரம் செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளார்.

​அதேபோல், ஆண் நடத்துநர்களை மட்டுமே பார்த்த இடத்தில் திருநங்கை நடத்துநரைப் பார்ப்பது புதுமையாகவும் பெருமையாகவும் இருப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

 தமிழக அரசு திருநங்கைகளுக்கு இதுபோன்ற அரசுப் பணிகளை அதிகளவில் வழங்கினால், அவர்கள் கௌரவமாக வாழ வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

​தற்போது தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் விநோதினி, தனக்குப் பணி நிரந்தரம் செய்து தர வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். 


ஒரு பேருந்தின் பயணத்தை மட்டுமல்லாது, தன் வாழ்க்கைப் பயணத்தையும் தன்னம்பிக்கையுடன் வழிநடத்தத் தொடங்கி இருக்கும் விநோதினி, சமூகத்தின் மற்ற திருநங்கைகளுக்குச் சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கிறார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: