வங்கியைச் சூழும் யாசகர்கள் கூட்டம்" ; கோவை ராமநாதபுரத்தில் வாடிக்கையாளர்கள் அச்சம் - காப்பகத்தில் ஒப்படைக்கக் கோரிக்கை!
வங்கி நுழைவாயிலை மறைத்து அமர்வதால் பணப் பரிவர்த்தனை செய்ய வருவோர் தவிப்பு: போலீஸார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
கோவை, திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியின் நுழைவாயில் முன்பாக யாசகர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து வருவதால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் அச்சத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
கோவை மாநகரின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருச்சி சாலை, ராமநாதபுரம் பகுதியில் பல முன்னணி வங்கிகள் மற்றும் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் முன்பாக தினமும் ஏராளமான யாசகர்கள் திரண்டு அமர்ந்து கொண்டு, வங்கிக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து யாசகம் கேட்டு அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.
வங்கிக்கு ஏ.டி.எம் (ATM) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யத் பெருந்தொகையுடன் வரும் வாடிக்கையாளர்கள், நுழைவாயிலிலேயே கூட்டம், கூட்டமாக யாசகர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்து அச்சம் அடைந்து வங்கிகளுக்குள் செல்லத் தயங்குகின்றனர்.
யாசகர்களின் இந்தச் செயலால் வங்கியின் தினசரி வணிகச் செயல்பாடுகளும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன், காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகச் தலையிட்டு, வங்கியின் முன் திரளும் யாசகர்களைப் பாதுகாப்பாக மீட்டு, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி ஊழியர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: