கடந்த ஒரு மாதத்தில் 9 கொள்ளை சம்பவங்கள்: சி.சி.டி.வி யால் தப்பிய வீடுகள்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கிணத்துக்கடவு அருகே சி.சி.டி.வி கேமராவைக் கண்டு மர்ம நபர்கள் திரும்பிச் சென்ற காட்சிகள் வெளியாகிப் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 9 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களது வீடுகள் மற்றும் கடைகளின் முன்பாகப் பொதுமக்கள் சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிணத்துக்கடவை அடுத்த அரசன் பாளையம் பகுதியில் நள்ளிரவு வேளையில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் உலா வந்து உள்ளார்.
அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, கதவை உடைத்து வீட்டிற்குள் திருட முயற்சித்து உள்ளனர்.
அப்போது, வீட்டின் நுழைவாயிலில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை தற்செயலாகக் கவனித்த அத்திருடர்கள், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் உடனடியாக அங்கு இருந்து திரும்பிச் சென்றான் .
திருடர்கள் கேமராவைப் பார்த்து விட்டுப் பயந்து சென்ற இந்த சம்பவமும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: