கூடலூர் வனப்பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி: சாதுரியமாகச் செயல்பட்டுத் தப்பிய ஓட்டுநர்!
கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்குச் சுற்றுலா சென்ற பயணிகளின் ஜீப் வாகனத்தை ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்திய அதிர்ச்சி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வார விடுமுறையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக இன்று காலை திறந்தவெளி ஜீப் வாகனத்தில் சென்று உள்ளனர்.
கூடலூரை அடுத்த அடர்ந்த வனப்பகுதிச் சாலையில் வாகனம் சென்று கொண்டு இருந்த போது, வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, சுற்றுலா பயணிகள் பயணித்த ஜீப் வாகனத்தைக் கண்டு கடும் ஆத்திரம் அடைந்தது. பிளிறியபடி அந்த வாகனத்தை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து துரத்தத் தொடங்கியது.
யானை மிக அருகில் ஆக்ரோஷமாகத் துரத்தி வந்ததைக் கண்டு ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கூச்சலிட்டனர். இருப்பினும், ஜீப்பை இயக்கிய ஓட்டுநர் பதற்றம் அடையாமல் சாதுரியமாக வாகனத்தை வேகப் படுத்திப் முன்னோக்கியும் நகர்த்தி யானையிடம் இருந்து பாதுகாப்பாகத் தப்ப வைத்தார்.
யானை ஜீப்பை நீண்ட தூரம் ஆக்ரோஷமாகத் துரத்தி வரும் இந்தக் காட்சியை வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்தத் திக் திக் நிமிடங்கள் அடங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: