ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

பிரதமர் வேட்பாளர் விஜய் ?" - கோவை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் கொடுத்த பதில்!

SHARE

“பிரதமர் வேட்பாளர் விஜய்” என்பது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் மனநிலை – திருமாவளவன் பேட்டி...

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கான சூழல் கனிந்துள்ளதாகவும் அமைச்சர் வன்னியரசு இதனை உறுதி செய்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி ஆணவக் கொலை தடுப்பு மசோதா வரையறுக்கப்படும் என இந்தக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி தொடர்பாக இரண்டாவது முறையாக கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தி வருவதாகவும், கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள், என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கூட்டம் நடைபெறும் போதுதான் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் காரசாரமாக விமர்சிப்பது வழக்கமானதுதான் எனக் கூறிய அவர், அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும், மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்க சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்து சென்ற திருமாவளவனிடம், “தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதமர் வேட்பாளர் விஜய்யா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்க மீண்டும் திரும்பி வந்த திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் யாரும் இதுவரை விஜய்யை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றும், மற்றவர்கள் அவ்வாறு பேசி வருவதை மட்டும் வைத்து அதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

“என்னதான் அமைச்சர்கள் இருந்தாலும், தொண்டர்களின் மனநிலை இருக்கத்தான் செய்யும். வடஇந்திய ஊடகங்கள் பிரதமர் வேட்பாளர்கள் வரிசையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருடன் விஜய்யையும் குறிப்பிட்டு வருகின்றன. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகத்துடன் அவ்வாறு பேசி வருகிறார்கள்” என திருமாவளவன் கூறினார்.

மேலும், “ராகுல் காந்தி பிரதமர் இல்லை என்று யாரும் கூறவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். 2029 தேர்தல் வரட்டும்; அப்போது அது குறித்து கூறுகிறேன்” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: