செவ்வாய், 8 செப்டம்பர், 2026

"வீட்டின் முன் விளையாடிய குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி" ; கோவையில் நடந்த சோகம் - பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன பிஞ்சு உயிர்!

SHARE

ரத்தினபுரி வ.உ.சி. நகரில் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த தொட்டிக்குள் விழுந்து பலி : சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்!

 கோவையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த ஒரு வயது ஆண் குழந்தை, சரியாக மூடப்படாத நிலத்தடித் தண்ணீர் தொட்டிக்குள் (Sump) தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேணுகோபால் - கலைவாணி தம்பதியர். இவர்களுக்குத் தன்வந்த் (1) என்ற ஒரு வயதே ஆன ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், நேற்று (செப். 7) மழலை மாறாத தன்வந்த் வழக்கம் போல் தனது வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். வீட்டின் அருகே தரையோடு தரையாக அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டி (Sump), மேல்பகுதி முழுமையாகச் காங்கிரீட் மூலம் மூடப்படாமல், வெறும் தகரத்தைக் கொண்டு தற்காலிகமாக மட்டுமே அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

விளையாட்டின் இடையே தன்வந்த் அந்தத் தகரத்தின் மீது ஏறியபோதோ ? அல்லது அதனை நகர்த்தியபோதோ ? எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறித் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உள்ளான்.

சிறிது நேரமாக வெளியே விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையின் சத்தம் திடீரெனக் கேட்காததால், பதறிப்போன பெற்றோர் வீட்டின் வெளியே வந்து தேடி உள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் முன்பிருந்த தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்து உள்ளனர்.

அப்போது குழந்தை தண்ணீருக்கு உள்ளே மூழ்கிக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர். அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை உடனடியாக மீட்டுத் தொட்டியில் இருந்து வெளியே எடுத்தனர். எனினும், குழந்தை பேச்சுமூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளது.

பெற்றோர் உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றனர். அங்குச் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரின் சிறிய கவனக்குறைவால், சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டி ஒரு பச்சிளம் குழந்தையின் இன்னுயிரைப் பறித்து உள்ள கோரச் சம்பவம் ரத்தினபுரி பகுதி மக்களைப் பெரும் சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: