300-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை: அன்னதானம் மற்றும் எழுச்சிமிகு ஊர்வலத்துடன் கொண்டாட்டம்!
விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் மற்றும் மேள தாள ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான வடிவங்களில் பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாகக் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ.பி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மிக பிரம்மாண்டமான அளவில் கலைநயமிக்க செட் அமைக்கப்பட்டு, அதில் கம்பீரமான மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்று அதிகாலையிலேயே கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ராக்கிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
மாலை வேளையில் நடைபெற்ற விழாவில், செண்ட மேளம், மாலை ஜமாப் மற்றும் அதிரடி டிரம்ஸ் இசை நிகழ்ச்சிகள் (Drums Performance) உற்சாகமாக நடைபெற்றன. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிப்பாடி விழாவைக் கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்குச் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் விநாயகர் சிலை ஊர்வலமும் எழுச்சியுடன் நடைபெற்றது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் 'படையப்பா' (எ) முத்துக்குமார், நிர்வாகிகள் தினேஷ், ஞானசேகர், அருண், நவீன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

0 கருத்துகள்: