சர் ராபர்ட் பீலின் கோட்பாடு, சைபர் குற்றங்கள் சவால் & காவல் குடும்பங்களின் தியாகம் குறித்து உருக்கமான வாழ்த்துச் செய்தி!
மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் அமலுக்கு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான இன்று (செப்டம்பர் 6) தமிழ்நாடு காவல் தினத்தைக் கொண்டாடும் வகையில், கோவை மாநகரக் காவல் ஆணையர் தனது நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியையும், காவலர்களுக்குச் சிறப்பு வழிகாட்டுதல்களையும் வழங்கிச் சிறப்பித்து உள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு காவல் தினம்:
1859 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று அமலுக்கு வந்த மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் (Madras District Police Act), நமது மாநிலத்தில் நவீன காவல் நிர்வாகத்தின் மிக முக்கிய வரலாற்று மைல்கல்லாக அமைந்தது.
அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்பம், தொழில்முறை திறன் (Professionalism) மற்றும் மனிதநேயத்துடன் மக்களின் பாதுகாப்பிற்காகச் சிறப்பாகப் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய காவல் ஆணையர், அதிகாரிகள், காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தனது தமிழ்நாடு காவல் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
"காவல்துறை என்பது ஒரு வேலை அல்ல ; அது ஒரு சேவை!":
நவீன காவல் துறையின் தந்தை சர் ராபர்ட் பீலின் (Sir Robert Peel) பொன்மொழியை மேற்கோள் காட்டிப் பேசிய காவல் ஆணையர்:
*"குற்றம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறாமல் தடுப்பதே காவல் துறையின் முதன்மையான நோக்கமாகும். காவல் துறையின் உண்மையான வலிமை அதிகாரத்தில் இல்லை; மக்கள் நம் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையிலும் வழங்கும் ஒத்துழைப்பிலும் தான் உள்ளது.
காவல்துறை என்பது வெறும் வேலை அல்ல;
அது ஒரு பொறுப்பு, ஒரு சேவை, ஒரு தியாகம். மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் நம்மை நாடி வரும் போது அவர்களுக்குத் தேவையானது ஒரு பாதுகாப்பான கரம், நம்பிக்கையான வார்த்தை மற்றும் நேர்மையான நடவடிக்கை ஆகும். சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதும் நமது கடமை"* எனக் குறிப்பிட்டார்.
பெண்கள் பாதுகாப்பு & நவீன சவால்கள்:
குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய ஆணையர், தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் சைபர் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ளக் காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவல் குடும்பங்களின் தியாகமும் தியாகிகள் நினைவும்:
இரவு பகலாகப் பணியாற்றும் ஒவ்வொரு காவலரின் பின்னாலும் இருக்கும் குடும்பங்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், கடமையில் உயிர்நீத்த காவல் தியாகிகளுக்குத் தனது வீரவணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினார்.
கோவை மாநகரக் காவல்துறையைத் திறமையான, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் மக்கள் நட்பான (People-Friendly Police) காவல்துறையாக மேலும் உயர்த்த அனைத்துக் காவலர்களும் நேர்மை, ஒழுக்கம் மற்றும் மனிதநேயத்துடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் எனத் தனது உ உரையை நிறைவு செய்தார்.

0 கருத்துகள்: