பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம், புதுச்சேரி வருகை - திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் !!!
பிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை (பிப். 28) இரவு தமிழகம் வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி குஜராத் மற்றும் ராஜஸ்தான் பயணங்களைத் தொடர்ந்து நாளை இரவு 9 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார். இதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை புதுச்சேரி செல்லும் அவர், அங்கு ரூ. 2,700 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 1 மாலை 3 மணி அளவில் மதுரைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ. 4,400 கோடி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.
இத்துடன், மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் இடையிலான புதிய நான்கு வழி நெடுஞ்சாலையின் பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்.
மேலும், அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு மற்றும் திருவாரூர் சந்திப்பு உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்களையும் அவர் தொடக்கி வைக்கிறார்.
இதை அடுத்து, தமிழ்நாட்டில் ஒளிபரப்பு சேவைகளை வலுப்படுத்த, கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூரில் மூன்று புதிய ஆகாஷ்வாணி எஃப்எம் ரிலே டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: