செவ்வாய், 28 ஏப்ரல், 2026

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு திடீரென வந்த விஜய் - அது என்ன சத்ரு சம்ஹார யாகம் ?

SHARE

 திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு திடீரென வந்த விஜய் - அது என்ன சத்ரு சம்ஹார யாகம் ?

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அதிகாலை வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய், அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர், எதிரிகளை அழிக்கும் 'சத்ரு சம்ஹார யாகம்' என்ற விஷேச யாகத்தையும் அவர் நடத்தி உள்ளார்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக இது விளங்குவதால், இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் இன்று (ஏப்ரல் 28) அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர் கோயிலில் உள்ள குகை சன்னதியில், சத்ரு சம்ஹார யாகம் செய்தார். சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால் எதிரிகள் வீழ்வர் என்பது ஐதீகம்.

அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் இந்த விசேஷ யாகம் நடத்தி உள்ளார். எதிரிகள் மற்றும் எதிர்மறை விஷயங்களை வீழ்த்துவது; வழக்குகளை முறியடிப்பது, நோய்களல் இருந்து விடுபடச் செய்வது என இந்த சத்ரு சம்ஹார யாகம் நடத்துவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி வெற்றி, மன உறுதி, துணிச்சலை தரும் யாகமாகவும் இது கருதப்படுகிறது.

இந்த யாகத்தை முடித்த பின்னர், மூலவர், சுப்பிரமணியர் சன்னதி முன்பு தரையில் அமர்ந்து விஜய் வழிபட்டார். தொடர்ந்து, சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, இன்று (ஏப்ரல் 28) அதிகாலை 1 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், பின்னர் அங்கு இருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலைச் சென்று அடைந்தார். பட்டு வேட்டி - சட்டையில் வந்த விஜய்க்கு அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரிபுரசுந்தரிகள் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கையில் வேலுடன் முருகப்பெருமானை தரிசிக்க சென்றார். விஜய்யின் வருகையை முன்னிட்டு, கோயில் பிரகாரம் முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

தரிசனம் செய்த பின்னர் பொதுமக்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது, அவர் மீது சிலர் மலர் தூவி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர், கூடியிருந்த மக்களை பார்த்து விஜய் கையை அசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: