ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

ஜனநாயகன்' சட்டவிரோதமாக வெளியான விவகாரம் - சைபர் க்ரைம் போலீசார் விசாரணை !!!

SHARE

 ஜனநாயகன்' சட்டவிரோதமாக வெளியான விவகாரம் - சைபர் க்ரைம் போலீசார் விசாரணை !!!

ஜனநாயகன்' திரைப்படம் சட்ட விரோதமாக வெளியான விவகாரம் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் நடிப்பில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவான திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த திரைப்படம் 2026 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில், தணிக்கை சான்று கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் இடையே, தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தலுக்கு பிறகு 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 'ஜனநாயகன்' தனது திரை வாழ்வின் கடைசி திரைப்படம் என்று அறிவித்திருந்த விஜய், இனி மக்களுக்காக நேரத்தை செலவிட விருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முழு காட்சியும் ஹெச்.டி தரத்தில் சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியாகி தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சிபி சத்யராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அத்துடன், இது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அதேபோல் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், "ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை டவுன்லோடு செய்து இன்ஸ்டாகிராம், டெலிகிராம், யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இணையதளங்களில் யாரும் பகிரக் கூடாது. 'ஜனநாயகன்' படத்தை டவுன்லோடு செய்தவர்கள் உடனடியாக நீக்க வேண்டும். எச்சரிக்கையை மீறி படத்தை டவுன்லோடு செய்வதோ, பகிர்வதோ கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை அடுத்து 'ஜனநாயகன்' திரைப்படம் சட்ட விரோதமாக இணைய தளத்தில் வெளியானது குறித்து கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல் துறையிடம் புகார் அளித்து உள்ளது. அதன் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு சட்டம் 66, காப்புரிமை சட்டம் 63 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், 'ஜனநாயகன்' படத்தை யார் வெளியிட்டது ? எங்கு இருந்து வெளியிடப்பட்டது ? என்று குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: