வெள்ளி, 29 மே, 2026

கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு அமைச்சருடன் சந்திப்பு ; ஒரு மாதத்திற்குள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு” - 11 அம்ச கோரிக்கைகளை கேட்டறிந்த பின் அமைச்சர் அளித்த உறுதிமொழி !!!

SHARE

 கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு அமைச்சருடன் சந்திப்பு ; ஒரு மாதத்திற்குள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு” - 11 அம்ச கோரிக்கைகளை கேட்டறிந்த பின் அமைச்சர் அளித்த உறுதிமொழி !!!

டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களை கோவை சுந்தராபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அம்மனுவில், 480 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும், கடந்த 23 ஆண்டுகளாக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து காலத்தை கடத்தாமல், உடனடியாக அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். 

மேலும், இஎஸ்ஐ (ESI) மருத்துவ திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வாய்மொழியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்ட மேலாளர்களுக்கான அதிகாரங்களை (மீளப் பணியிடம், பணிமாற்றம் உள்ளிட்டவை) மீண்டும் அவர்களுக்கே திரும்ப வழங்க வேண்டும்.

நீண்ட நாட்களாக கடை பணி மறுக்கப்பட்டு கிடங்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஒழுங்கு நடவடிக்கை முடிவு பெறாமல் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கும் உடனடியாக கடை பணியுடன், வழங்கப்படாத பிழைப்பூதியத்தையும் வழங்கிட வேண்டும்.

 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு 500 மீட்டர் என்ற இலக்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் முறையான ஆய்வு செய்யாமல், FL2 தனியார் மனமகிழ் மன்றங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் மூடப்பட்ட 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மறுஆய்வு செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமீறல் மது விற்பனைக்கு தடை: FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மனமகிழ் மன்றங்களில், விதிமுறைகளுக்கு மாறாக உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்வதையும், 180 மி.லி மது வகைகளை வழங்குவதையும் கடுமையான விதிமுறைகள் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.

 சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தப்பட்ட காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்துவதை விடுத்து, மாற்றுத் திட்டம் மூலம் அதனை செயல்படுத்த வேண்டும்.

கடந்த ஓராண்டாக அமலில் உள்ள End to End Billing முறையில் நிலவும் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து, அனைத்து கடைகளிலும் தடையற்ற வைஃபை (WIFI) இணைய வசதி ஏற்படுத்தித் தருவதோடு, கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

சமூக ஆர்வலர் மற்றும் போலி பத்திரிகையாளர் என்ற பெயரில், ஆதாயம் அடையும் நோக்கில் அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் மின் கட்டணம், அட்டை பெட்டி கழிவு, உடைந்த பாட்டில்கள் இழப்பீடு, இறக்கு கூலி, கட்டிட வாடகை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக செலவுகளையும் ஊழியர்கள் தலையில் சுமத்தாமல், நிர்வாகமே முழுமையாக ஏற்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, உரிய தீர்வு காண வேண்டும் என இக்கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மனுவில் கேட்டுக்கொண்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: