அ.தி.மு.க வில் முடிவுக்கு வந்த 15 நாள் குழப்பம்; சாதித்த இ.பி.எஸ்: முரண்டு பிடிக்கும் சி.வி.எஸ் !!!
எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி அணியினர் மீண்டும் ஒன்று இணைந்ததால் அ.தி.மு.க வில் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த அதிகார மோதல் முடிவுக்கு வந்து உள்ளது.
த.வெ.க அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அ.தி.மு.க வை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் இந்த 25 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியை பறிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று அதிருப்தி அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் சார்பிலும் இ.பி.எஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த கடிதங்கள் சபாநாயகரின் பரிசீலணையில் இருந்துவரும் நிலையில், அதிருப்தி அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களான மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்திய பாமா, அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து சென்னை அருகே பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் தங்களை த.வெ.க வில் இணைத்துக்கொண்டனர். இதை அடுத்து அ.தி.மு.க எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 47-இல் இருந்து 43-ஆக குறைந்தது.
இதன் இடையே, சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ க்களான ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர், பண்ரூட்டி எம்.எல்.ஏ மோகன், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ திலீபன் ஜெயசங்கர், காங்கேயம் எம்.எல்.ஏ நடராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
ஆதரவு எம்.எல்.ஏ க்கள் அடுத்தடுத்து தங்களின் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க வுடன் இணைவதும், சிலர் இ.பி.எஸ் தரப்புடன் மீண்டும் இணைந்து வருவதும் சி.வி.சண்முகம், வேலுமணி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து நேற்று காலை ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து மீண்டும் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் நேற்று மாலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு அவரது தரப்பு எம்.எல்.ஏக்கள் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், நத்தம் விஸ்வநாதன், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன், கரூர் எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலக்கோடு எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன், விராலிமலை எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் வருகை தந்து ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனையை தொடர்ந்து எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுடன் சி.வி.சண்முகம் செல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணியினர் சந்தித்தப் பின்னர் அவர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு சென்று சபாநாயகர் ஜெ.சி.டி பிரபாகரிடம் இ.பி.எஸ் தரப்புக்கு எதிராக அளித்த மனுவை திரும்பப் பெற்றனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அ.தி.மு.க வில் அனைவரும் ஒன்றாக இணைந்து விட்டோம்" என தெரிவித்தார்.
இந்நிலையில், சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களிடம் தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க வில் இணையலாமா ? அல்லது இ.பி.எஸ் உடன் சேர்ந்து பயணிக்கலாமா? என்று தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ஆலோசனைக்கு பின்பு வீட்டில் இருந்து வெளியே வந்த சி.வி.சண்முகத்திடம், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வீர்களா ? என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், 'நோ கமெண்ட்ஸ்' என்று கூறியவாறே அங்கு இருந்து சென்றார்.

0 கருத்துகள்: