புதன், 27 மே, 2026

ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்பும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி !!!

SHARE

 ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்பும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி !!!

பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஆசிரியர் காலி பணி இடங்கள் நிரப்புவதற்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, இப்பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்து உள்ளார்.

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஆய்வு செய்தார். பணிகள் எந்த அளவுக்கு நிறைவு பெற்று உள்ளது என்பதை கேட்டறிந்த அவர், அதை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, "அரசு பள்ளிகளில் காலியிடம்: தகுதித் தேர்வில் வென்றவர்களை இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும், தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013-14ஆம் நியமிக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தி இருந்தார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பள்ளிக் கல்வித் துறை சார்பாக உள்ள ஆசிரியர்களின் காலி பணி இடங்களை முறையாக ஆலோசனைகள் மேற்கொண்டு, வேகமாக தேர்வு நடத்தி காலி பணி இடங்களை நிரப்புவோம்.

உடற்பயிற்சி ஆசிரியர்களின் காலி பணி இடங்களுக்கான தேர்வர்களை அடையாளம் கண்டு அதனை நிரப்புவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அலுவலர்களுக்கு தெரிவித்து உள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும்” என ராஜ்மோகன் தெரிவித்தார்.

மேலும், “முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு, பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முக்கியக் காரணியாக மனதில் வைத்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஜூன் 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பாரத சாரண சாரணியர் இயக்கம் விரைவில் தொடங்க உள்ளோம். பள்ளி மாணவ - மாணவிகள் அனைவரும் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த இயக்கத்தில் இணைந்தால் ஒழுக்கம், கல்வி, பயிற்சி உள்ளிட்டவைகள் மாணாக்கர்களுக்கு கிடைக்கும். இவை மாணவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: