சனி, 30 மே, 2026

ஜூன் 1-ல் முதல்வர் விஜய் திருச்சி பயணம் - நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் !!!

SHARE

 ஜூன் 1-ல் முதல்வர் விஜய் திருச்சி பயணம் - நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் !!!

நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதி வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், அங்கு நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் திங்கட்கிழமை திருச்சிக்கு வருகை தர உள்ளார். அப்போது தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 4 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ​இந்தத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தார். அதில் ​திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்ற விஜய், சுமார் 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தான் ராஜினாமா செய்து இருந்தாலும், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும், த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த ஒட்டுமொத்த திருச்சி மக்களுக்கும் நன்றி கூற விஜய் திட்டமிட்டு உள்ளார். அதன்படி, வரும் திங்கட்கிழமை மாலை (ஜூன் 1) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

 இதனை முன்னிட்டு சென்னையில் இருந்து திங்கட்கிழமை அன்று தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் முதலமைச்சர் விஜய், அங்கு இருந்து சாலை மார்க்கமாகப் பொதுக் கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி வளாகத்திற்கு வர உள்ளார்.

​இந்த நன்றி அறிவிப்புப் பொதுக் கூட்டத்தில் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பொதுக் கூட்ட மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: