பிரதமர் மோடியின் சகோதரர் பரமக்குடியில் சாமி தரிசனம் - உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் !!!
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் உடன் பிறந்த சகோதரர்களில் ஒருவர் பிரகலாத் மோடி. இவர், அகில இந்திய நியாய விலைக்கடை முகவர்கள் கூட்டமைப்பின் (AIFPSDF) தேசியத் துணைத் தலைவராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தென் இந்தியாவின் உள்ள முக்கிய புண்ணிய தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். தற்போது தமிழகம் வந்திருக்கும் பிரகலாத் மோடி, நேற்று (மே 29) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அவர் சென்றார். அப்போது செல்லும் வழியில் பரமக்குடியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோயிலுக்குச் சென்று மனமுருகி சாமி தரிசனம் செய்தார். அங்கு பக்தர்கள் அவரை வரவேற்ற நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் சகோதரர் வந்து இருக்கும் தகவல் அறிந்த நூற்றுக் கணக்கான பக்தர்களும், பொதுமக்களை அவரை பார்ப்பதற்காக கோயில் முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பரமக்குடியில் தரிசனம் முடித்த கையோடு அவர் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்கள் அனைவருமே எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், தற்போது தமிழகம் வந்து உள்ள பிரதமரின் தம்பியான பிரகலாத் மோடிக்கு ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி ஆன்மிக சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
பிரகலாத் மோடி, குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தில் ஒரு நியாய விலை கடை நடத்தி வருகிறார். 2001 ஆம் ஆண்டு அகில இந்திய நியாய விலைக் கடை முகவர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து அதில் அங்கம் வகித்து வரும் அவர், தற்போது அந்த கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். நியாயவிலைக் கடை உரிமையாளர்கள் சந்திக்கிற பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டு இருக்கும் இவர், அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: