வியாழன், 21 மே, 2026

சூடா இருக்கீங்களா வாங்க.. கூலாக ஒரு கூழ் குடிக்கலாம்" ; வெயில் கொடுமைக்கு மத்தியில் 20 ஆண்டுகால கம்மங்கூழ் சேவையால் கோவையை கலக்கும் 'கூல்' பாண்டி !!!

SHARE

 சூடா இருக்கீங்களா வாங்க.. கூலாக ஒரு கூழ் குடிக்கலாம்" ; வெயில் கொடுமைக்கு மத்தியில் 20 ஆண்டுகால கம்மங்கூழ் சேவையால் கோவையை கலக்கும் 'கூல்' பாண்டி !!!

​கோவை அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு 'ஃப்ரீ' கூழ்..... வியாபாரத்தைத் தாண்டி மனிதாபிமானத்தால் அள்ளும் புலி பாண்டி !!!

 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் அளவிற்கு அக்னி நட்சத்திர கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

 இந்த அனல் காற்றில் இருந்து தங்களது உடல் நலத்தைப் பேணிக் காப்பதற்காகப் பொதுமக்கள் பலரும் குளிர்ச்சியான இயற்கை உணவுகளை நாடி ஓடும் வேளையில், கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் இயற்கை கலி மற்றும் கம்மங்கூழ் விற்பனையில் கலக்கி வருகிறார் 'கூல்' பாண்டி என்று அன்போடு அழைக்கப்படும் பாண்டி.

 வெயிலுக்கு இதமளிக்கும் வகையில், "சூடா இருக்கீங்களா வாங்க, கூலாக ஒரு கூல் குடிக்கலாம்!" என்ற கலகலப்பான இவர் நடத்தி வரும் கடை, தற்பொழுது கோவை ஏரியா மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய "ஸ்பாட்" ஆக மாறி உள்ளது.

​கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தந்தையின் காலம் தொட்டு, தற்பொழுது வரை தலைமுறை தாண்டி இந்த கம்மங்கூழ் வியாபாரத்தை மிகவும் நேர்த்தியாகவும், தரமாகவும் இவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவருடைய கைவண்ணத்தில் தயாராகும் பாரம்பரியக் கம்மங்கூழ் மற்றும் கேப்பக் கலி ஆகியவற்றின் சுவைக்கு அடிமையாகி, நாள்தோறும் பிற்பகல் வேளையில் இவருடைய கடையைத் தேடி வரும் வாடிக்கையாளர்களின் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

வெறும் லாபம் ஈட்டும் வர்த்தகமாக மட்டும் இதைப் பார்க்காமல், கோவையின் பூர்வகுடி மக்களுக்குச் சத்தான இயற்கை உணவை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இவர் செயல்படுவது தான் இந்த 20 ஆண்டு கால "சக்ஸஸ்" ரகசியம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

​இந்த வியாபாரத்திற்குப் பின்னால் இருக்கும் பாண்டி அசாத்தியமான மனிதாபிமானச் சேவை தான் தற்பொழுது கோவையின் பேசும் பொருளாகி உள்ளது.

 நாள்தோறும் கோவை அரசு மருத்துவமனைக்கு (GH) சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கும், அவர்களுடன் தங்கி இருக்கும் ஆதரவற்றோர் மற்றும் உறவினர்களுக்கும், உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டும் கம்மங்கூழ் மற்றும் கேப்ப கலியை முற்றிலும் இலவசமாக வழங்கி "ரியல் ஹீரோ"வாக வலம் வருகிறார். 

அதுமட்டுமன்றி, பள்ளி முடிந்து களைப்புடன் தனது கடையைக் கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகக் கம்மங்கூழ் வழங்கி அவர்களின் பசியையும், தாகத்தையும் ஆற்றி வருகிறார்.

​இன்றைய கார்ப்பரேட் உலகமயமாக்கலில் குளிர்பானங்கள் என்ற பெயரில் விற்கப்படும் ரசாயன பானங்களுக்கு மத்தியில், நம் பாரம்பரிய உணவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இவரின் சேவை பாராட்டுக்குரியது.

 வியாபாரத்தை ஒருபுறம் வெற்றிகரமாக நடத்திக் கொண்டே, மறுபுறம் ஏழை, எளிய மக்களுக்கான சமூகச் சேவையிலும் தடம் பதித்து வரும் 'கூல்' பாண்டியின் இந்த உன்னத மனிதாபிமானம், "கோவைக்கு என்றும் தேவை" எனப் பகுதி மக்கள் தங்களது வாழ்த்துகளை வாரி வழங்கி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: