புறவாயில் வழியாக அமைச்சரவையில் இடம் பிடித்து உள்ளது காங்கிரஸ் ; கோட்டையின் புதிய ‘கெமிஸ்ட்ரி’யை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் !!!
டெல்லியின் தேசபக்தி சுற்றறிக்கையை மாநில அரசு நிராகரிக்க முடியாது : கோவையில் 2-வது நாளாக தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி ‘காஸ்ட்லி’ பேட்டி!!!
கோவையில் நடைபெற்ற பா.ஜ.க மையக்குழு கூட்டத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் வழிமுறைகள் நாட்டின் நலனுக்கானவை என்பதால், தமிழக அரசு அவற்றைப் பின்பற்றுவது அவசியம் என தெரிவித்தார்.
கோவை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “நாங்கள் எதிர்த்ததாக கூறிய சக்திகளோடு இணைந்து ஆட்சி அமைத்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி புறவாயில் வழியாக அமைச்சரவையில் இடம் பிடித்து உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகள் சூழ்ந்த கட்சியாக உள்ளதாகவும், மக்கள் நலத் திட்டங்களில் பின்தங்கியதாகவும் அவர் விமர்சித்தார். “மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறியவர்கள் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவது எவ்வாறு சாத்தியம் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்” என்றார்.
இளைஞர்களுக்கு தேசபக்தி உணர்வை வளர்க்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அதை மாநில அரசுகள் நிராகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் உத்தரவுகள் தனிப்பட்டவை அல்ல, நாட்டின் நலனுக்கானவை என்பதால் அவற்றை பின்பற்றுவது கட்டாயம் என்றார்.
அதேபோல், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது சனாதனம், வந்தே மாதரம் போன்ற விஷயங்களை அரசியலாக்கியதாகவும், இனி உணர்ச்சிப் பூர்வ அரசியலைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமான அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழக அரசியல் சூழலில் கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விமர்சனம் செய்யும் ராகுல் காந்திக்கு அதன் பின்னணி புரிதல் இல்லை எனவும், அந்த பயணங்கள் அனைத்தும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் காக்கும் நோக்கத்துடன் நடைபெறுவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் மத்திய அரசின் திட்டங்களை மறுப்பதற்குப் பதிலாக, மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், குறிப்பாக கல்வித் துறையில் மத்திய திட்டங்களை எதிர்க்காமல் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, பா.ஜ.க வின் புதிய நிர்வாகிகள் மாற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து, நிர்வாகிகள் மேலும் உற்சாகத்துடன் செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: