பதவியை ராஜினாமா செய்த 3 அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள்; உடனே த.வெ.க வுக்கு தாவல் !!!
அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் 3 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் அடுத்த நொடியே அமைச்சர் முன்னிலையில் தங்களை த.வெ.கக்காவில் இணைத்துக் கொண்டனர்.
கடந்த மே 13- ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க வின் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக அரசுக்கு எதிராக வாக்களித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் த.வெ.க வுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுடன் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் முதலமைச்சர் உள்பட 35 பேர் இடம் பெற்று உள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அந்த தரப்பைச் சேர்ந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இடையே, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க விவகாரத்தில் புதிய திருப்பமாக இன்று (மே 25) தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்த அ.தி.மு.க வைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூன்று பேரும் தங்களை த.வெ.க வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை அணிவித்து வரவேற்று சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இதற்கு இடையே, அ.தி.மு.க எம்எல்ஏக்கள் மூன்று பேரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்து உள்ளார். பதவியை ராஜினாமா செய்பவர்கள் காரணம் சொல்ல தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் சுமார் 7,194 வாக்குகள் வித்தியாசத்திலும், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார் சுமார் 9,693 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா சுமார் 16,727 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் அ.தி.மு.க வின் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க மூன்றாக பிளவுப்பட்டு உள்ளதால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ க்கள், அ.தி.மு.க வின் இ.பி.எஸ்யை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவதால், எஸ்.பி.வேலுமணி தரப்பின் பலம் குறைந்து வருகிறது.

0 கருத்துகள்: