ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கிய கார்; கணவன், மனைவி உயிரிழப்பு !!!
சேலம் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில், ஆழம் தெரியாமல் அந்த வழியாக காரில் சென்ற முதியவரும் அவருடைய மனைவியும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ஏலாதி கிராமப் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மழை பெய்தால், இந்த ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நிற்கும். இதனால், ஏலாதி கிராம மக்கள், இரண்டு மூன்று நாட்களுக்கு சுரங்கப் பாதையை பயன்படுத்தாமல் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு மாற்றுப் பாதை வழியாக செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
நேற்றிரவு, ஓமலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏலாதி கிராமம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவ்வழியாக வந்த கார், மழைநீர் தேங்கி நிற்பதை கவனிக்காமல் கடக்க முயன்றது. நீரின் அளவு அதிகமாக இருந்ததால், காரில் வந்த வயதான தம்பதி கடக்க முடியாமல், காரை பின்னோக்கி இயக்கி வெளியேற முயற்சித்து உள்ளனர்.
ஆனால், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், காருக்குள் இருந்த கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மூழ்கிய நிலையில் இருந்த காரை வெளியே எடுத்தனர். தொடர்ந்து, காரில் உயிரிழந்த நிலையில் இருந்த கணவன், மனைவி ஆகிய இருவரையும் சடலங்களாக மீட்டனர். பின்னர், இருவரின் உடல்களையும் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி ராதா என்பது தெரிய வந்தது. உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பியபோது இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றது தெரியவந்து உள்ளது. மேலும், இந்த உயிரிழப்பு குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை தண்ணீரை கோரிக்கை வைத்தும் ரயில்வே நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, நேற்றிரவு நடந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பிற்கு ரயில்வே நிர்வாகம்தான் காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சேலம் மாநகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள ரயில்வே சுரங்கப் பாதைகளில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மழைநீர் தேங்கி, அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே, இனிவரும் காலங்களில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாத வகையில், சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

0 கருத்துகள்: