காலை 7 மணி முதலே என்னை சந்திக்கலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா !!!
விளையாட்டுத் துறை தொடர்பாக காலை 7 மணி முதலே தன்னை சந்திக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்து உள்ளார்.
தமிழக அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், முதல்வர் விஜய்யுடன் பொறுப்பேற்ற ஒன்பது அமைச்சர்களுக்கு தங்களின் பணிகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜூனாவுக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த காலங்களில் மூத்த அமைச்சர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த பொதுப் பணித் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் கூடுதலாக விளையாட்டு மேம்பாட்டு துறையும் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு விளையாட்டு பின்புலம் இருப்பதால், அவர் இந்த துறையை சிறப்பாக கையாள்வார் என்ற நம்பிக்கையில் முதல்வர் விஜய் அவருக்கு விளையாட்டு துறையை ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பதவியேற்ற உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு பயிற்சியில் இருந்த விளையாட்டு வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கினை அடைந்திடும் வகையில் எனது அலுவலக பணிகளை நாள்தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி, விளையாட்டுத் துறை உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
எனவே காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டுத் துறை தொடர்பாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் எவ்வித சிரமுமின்றி எளிதாக என்னை அணுகி தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: