புதன், 20 மே, 2026

டெண்டர் விதி மீறல்: காஞ்சிபுரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் !!!

SHARE

 டெண்டர் விதி மீறல்: காஞ்சிபுரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் !!!

காரப்பேட்டை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான டெண்டரில் முறைகேடு நடந்து உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

15-வது மானியக் குழுவின் நிதித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிகுப்பம் அருகே உள்ள காரைப்பேட்டை கிராமத்தில் ரூ.16.83 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருந்தது.

அதற்கான குறுகிய கால டெண்டர் அறிவிப்பு மே 12 முதல் மே 19 வரை கோரப்பட்டு, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஒப்பந்த விதிமுறைகளின்படி, டெண்டர் ஆவணங்கள் மே 12 முதல் ஒப்பந்ததாரர்கள் பதிவிறக்கம் செய்திட ஏதுவாக ஒப்பந்தப்புள்ளி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறி, மே 18 ஆம் தேதியன்று டெண்டர் உருவாக்கப்பட்டு, நேற்று (மே 19) இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து, குறுகிய கால ஒப்பந்தப் புள்ளி அனுமதியை பெறாமல் டெண்டர் அழைப்பு கோரியமைக்கும், ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள் மீறப்பட்டதற்காகவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு விதிகள் 17e-ன் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவின் பேரில், இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி, முன்னாள் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் தற்போது வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சாந்தி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் எல்.கயல்விழி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

அதே சமயம் இடைநீக்க காலத்தின் அடிப்படை விதி 53(1) ன் படி, இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்வாதார உதவி தொகை மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும். மேலும், இடைநீக்க காலத்தில் உள்ள இரு அதிகாரிகளும் முன் அனுமதி பெறாமல், காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இருவர் மீதான டெண்டர் விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: