70 பேர் பலி ; தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைக்கு உடனடியாக அகற்ற வேண்டும் ; கோவையில் பெண்கள் திரண்டு முற்றுகை - பரபரப்பு !!!
கோவை, இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்து உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மூடக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எளிய கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில், இந்த டாஸ்மாக் கடையினால் ஒட்டுமொத்தக் கிராமங்களின் வாழ்வாதாரமும் சீரழிந்து வருவதாகப் பெண்கள் குற்றம் சாட்டினர்.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது;
"கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த டாஸ்மாக் கடையில் மது குடித்ததால், கல்லீரல் பாதிப்பு மற்றும் போதை விபத்துகளில் சிக்கி எங்கள் பகுதியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட ஆண்கள் உயிரிழந்து உள்ளனர்" என்ற திடுக்கிடும் தகவலை கூறி உள்ளனர். இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து உள்ளதாகவும், இளம் பெண்கள் பலரின் தாலியறுக்கக் காரணமாக இருக்கும் இந்தக் கடையை இந்த இடத்தை விட்டு உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் கடையை அகற்றுவதற்கு உயர் அதிகாரிகளின் கவனத்திற்குத் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. மேலும் இந்தக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் அடுத்தகட்டமாகப் பெரிய அளவிலான போராட்டத்தை கையில் எடுப்போம் என அத்தப்பகவுண்டன்புதூர் பகுதி பெண்கள் எச்சரித்தும் சென்றனர்.

0 கருத்துகள்: