இன்னும் ஒரு மாதத்தில் 90% அ.தி.மு.க வினர் த.வெ.க விற்கு வருவார்கள்; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு !!!
இன்னும் ஒரு மாதத்தில் 90% அ.தி.மு.க நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து உள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் த.வெ.க வின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், வெங்கடரமணன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் டி.ஜி.பி யும், மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வுமான நடராஜ், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அண்ணா தொழிற் சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் 100- க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களை த.வெ.க வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர்கள் த.வெ.க வின் துண்டை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பொதுப் பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இன்னும் ஒரு மாதத்தில் 90% அ.தி.மு.க நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவார்கள். அ.தி.மு.க வினருக்கு எந்த ஆஃபரும் கொடுத்து அழைக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஒரே நம்பிக்கையென அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அ.தி.மு.க வில் இருந்து வரும் தலைவர்களை நாங்கள் ஒரு குடும்பம் போல வரவேற்கிறோம். எம்.ஜி.ஆர் வழியில் நடக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான். செங்கோட்டையனுக்கு தலைவர் கொடுக்கும் மரியாதையைப் பார்த்து பலர் கட்சிக்கு வருகின்றனர்.
90% அ.தி.மு.க தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர முடிவு செய்துவிட்டனர். பாஜகவுடன் இணைந்து சந்தித்த தோல்விகளையும் அ.தி.மு.க தொண்டர்கள் சகித்துக் கொண்டனர். ஆனால் தி.மு.க, அ.தி.மு.க இணைந்து செய்த அரசியல் சூழ்ச்சியால் அவர்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர். ஜெயலலிதா தற்போது இல்லை என்ற எண்ணமும் அதற்கு காரணம்.
புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களிடம் இ.பி.எஸ் முதலமைச்சராக ஆதரவு என கையெழுத்து கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 47 எம்.எல்.ஏ க்களை வைத்துக் கொண்டு இ.பி.எஸ் எப்படி முதலமைச்சராக முடியும். இதை முதலில் எதிர்த்தது கம்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி.க வும் தான். செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த போது சிறிய கட்சி என விமர்சித்தனர். தற்போது தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி த.வெ.க தான்" என்றார்.
த.வெ.க விற்கென இதுவரை தொழிற்சங்கம் அமைக்கப்படாத நிலையில், கமலக்கண்ணன் இணைந்து உள்ளதால் புதிதாக தொழிற்சங்கம் தொடங்கப்படும் என்றும், அதன் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

0 கருத்துகள்: