செவ்வாய், 19 மே, 2026

ராகுல் காந்தி குறித்து பேச அனிதா ராதாகிருஷ்ணன் தகுதியற்றவர்; மாவட்ட காங்கிரஸ் தலைவர் விமர்சனம் !!!

SHARE

 ராகுல் காந்தி குறித்து பேச அனிதா ராதாகிருஷ்ணன் தகுதியற்றவர்; மாவட்ட காங்கிரஸ் தலைவர் விமர்சனம் !!!

தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராகுல் காந்தி குறித்து பேச தகுதியற்றவர் என்று தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசும் போது, தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்தும், அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் இன்று (மே 18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

"திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி குறித்து பேச தகுதியற்றவர். அவ்வாறு அவர் தொடர்ந்து பேசினால் அவரது உருவப்பொம்மையை எரிப்போம். மேலும் அவரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க அமைச்சர்கள் 13 பேர் தோல்வியை தழுவி உள்ளனர். தி.மு.க 20- க்கும் மேற்பட்டத் தொகுதிகளில் 3,000 குறைவான ஓட்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான். ஏழு முறை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன் எனக் கூறி வருகிறார். ஆனால் திருப்பதி போன்று திருச்செந்தூர் கோவிலை உருவாக்குவேன் என கூறி விட்டு தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணிகள் வெற்றி பெற்று இந்தியாவில் பாரத பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்று தி.மு.க வினர் முகத்தில் கரியை பூசுவோம். தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு துரோகங்களைச் செய்து உள்ளது. எனவே துரோகத்தைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க வுக்கு தகுதி இல்லை. அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோற்றதால் விரக்தியில் இதுபோன்று பேசி வருகிறார். அவர் ஒரு சிறந்த மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றால் நல்லது" எனத் தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: