தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சிறையில் சலுகை கோரிய மனு; ஆட்சியர் முடிவெடுக்க உத்தரவு !!!
சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக் கண்ணன் சலுகை கோரி தாக்கல் செய்த மனு மீது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் 2 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், விவசாயி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடைய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதின்றம், மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நிலத் தகராறில் முனுசாமி என்ற விவசாயி கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டடார். இந்த வழக்கில், வந்தவாசி தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.
இதை அடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட கமலக்கண்ணன் உள்ளிட்டோர், வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் தனது கணவருக்கு முதல் வகுப்பு வசதி வழங்கக் கோரி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணனின் மனைவி கலையரசி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தார்.
அந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் இதுவரை முடிவெடுக்காததால், தனது மனுவை பரிசீலித்து முதல் வகுப்பு வசதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கலையரசி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கமலக் கண்ணன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2009 முதல் 2011 வரை உறுப்பினராக இருந்தவர் என்கிற முறையில் அவருக்கு முதல் வகுப்பு வசதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், மனுதாரின் கோரிக்கை மனு, மாவட்ட ஆட்சியரின் பரிசீலனையில் உள்ளதாகவும், அவரிடம் இருந்து வரும் பரிந்துரையின் அடிப்படையில் உரிய முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முதல் வகுப்பு வசதிகள் வழங்கக் கோரி மனுதாரர் அளித்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், அவர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் வேலூர் சிறை நிர்வாகமும் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, கலையரசி தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.

0 கருத்துகள்: