தாம்பரத்தில் இரவோடு இரவாக 30 ரவுடிகள் கைது - போலீசின் ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் !!!
சென்னையை தொடர்ந்து தாம்பரத்தில் சிறப்பு அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார், இரவோடு இரவாக 30 ரவுடிகளை கைது செய்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி, சீனிவாசன், பரத் ஆகிய இரண்டு கானா பாடகர்கள், ஏழு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை மணிமங்கலம் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவயதில் ஏற்பட்ட முன்விரோதம், ஏரியாவில் யார் கெத்து என்பதில் போட்டி, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் இந்த இரட்டைக் கொலை நடைபெற்றது தெரியவந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல் முன்விரோதம் காரணமாக, பல்லாவரம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் முகம் சிதைத்து இரட்டைக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவங்களின் எதிரொலியாக, சென்னை மாநகர எல்லையில் நிலவும் ரவுடிகள் மோதல், போதைப்பொருள் விற்பனையை தடுத்தல், கட்டப் பஞ்சாயத்து, சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக "ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்" என்ற அதிரடி நடவடிக்கையில் போலீசார் நேற்றிரவு இறங்கினர்.
அதன் அடிப்படையில் ஒரே இரவில், சென்னை காவல் துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு 75-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர். புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 20 ரவுடிகள், தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் 18 ரவுடிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரவுடிகள், அடையாறு காவல் மாவட்டத்தில் 16 ரவுடிகள், அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் 10 ரவுடிகள் என சென்னை முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
அதே போல் தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் நடத்திய "ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்" என்ற அதிரடி நடவடிக்கையில் ஒரே இரவில் 30 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ரவுடிகள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவல் துறையினரின் இந்த அதிரடி "ஆபரேஷன் ஸ்பெஷல் டிரைவ்" நடவடிக்கை, கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற அடுத்தடுத்த குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் மற்ற குற்றவாளிகள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனத் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

0 கருத்துகள்: