ஞாயிறு, 17 மே, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் கைது !!!

SHARE

 தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் கைது !!!

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் சட்ட விரோதமாக வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

இதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விமானங்களில் பயணிக்க வரும் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களின் கைவிரல்களில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்தால் அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி சென்னை, மதுரை விமான நிலையங்களில், குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட வெளிநாடு குடியுரிமை பெற்றவர்கள் தமிழக சட்டப் பேரவை தேர்தலில், சட்ட விரோதமாக வாக்களித்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை கே.கே நகரில் இருந்து கிஷோர் (64) என்பவர் இந்த விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல வந்து இருந்தார்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அமெரிக்க பாஸ்போர்ட் அவரிடம் இருந்தது. ஆனால் அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்ததை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அவரிடம் விசாரித்த போது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் வாக்களித்தது தெரிய வந்தது. இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள் கிஷோரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். மேலும் அவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு, போலீசில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்ற 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சட்டவிரோதமாக வாக்களித்து விட்டு வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும் போது விமான நிலைய குடியுரிமை சோதனையில் சிக்கி வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து கைதாகி வருவது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: