ஞாயிறு, 17 மே, 2026

பொதுக்குழுவை கூட்ட கையெழுத்து கேட்டால் போடக் கூடாது - எடப்பாடி பழனிசாமி !!!

SHARE

பொதுக்குழுவை கூட்ட கையெழுத்து கேட்டால் போடக் கூடாது - எடப்பாடி பழனிசாமி !!!

அ.தி.மு.க பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என யாராவது கையெழுத்து கேட்டால் போடக் கூடாது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கையை த.வெ.க பெறாத நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள சில கட்சிகள் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தன. இதனிடையே 13-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க வை சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதை அடுத்து த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரையும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார்.

இருப்பினும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி எங்களை நீக்கியது செல்லாது என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் அ.தி.மு.க வில் உட்கட்சி பிரச்சனை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக தற்போது அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டு, தலைமை யாரிடம் உள்ளது ? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்த சூழலில் இரு தரப்பினரும் மாறி, மாறி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்றைய தினம் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதன் இடையே, சி.வி.சண்முகம் தரப்பில் பொதுக் குழுவை கூட்டி, சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். மேலும் அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்துவதற்காக மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து அவர்களிடம் கையெழுத்து பெறும் பணியை சி.வி.சண்முகம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் துவங்கி உள்ளனர். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் சில நாட்கள் முன்பு சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்றது.

இந்த சூழலில், சி.வி.சண்முகம் தரப்பு பொதுக் குழு நடத்துவதற்கான கையொப்பம் கேட்டு வந்தால் கையெழுத்து போடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை பயன்படுத்தி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து கேட்டால் யாரும் போட வேண்டாம் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: