செவ்வாய், 19 மே, 2026

அ.தி.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல் - ‘கனத்த இதயத்தோடு’ பிரிவதாக கடிதம் !!!

SHARE

 அ.தி.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல் - ‘கனத்த இதயத்தோடு’ பிரிவதாக கடிதம் !!!

கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்தும், தான் வகிக்கும் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்வதாக அ.தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை அறிவித்து உள்ளார்.

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க கட்சியில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்து வருவதால், பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டுமென கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் கட்சிக்குள் மேலும் நெருப்பை பற்ற வைத்தது.

இந்நிலையில் கட்சியில் இருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மூத்த தலைவர் செம்மலை அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தேர்தலுக்கு பிறகு கட்சிக்குள் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் தனக்கு மன வேதனையை உண்டாக்கி இருப்பதாகவும், இதே மனநிலையில் தான், கட்சிக்காக பாடுபட்டு வந்த லட்சக் கணக்கான தொண்டர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலலிதாவும் தனக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்ததாகவும், அரசியலில் நிலையான அங்கீகாரத்தை வழங்கியதாகவும், அந்த நன்றிக்காக இயக்கத்தில் சுயநலமின்றி பணியாற்றி வந்ததாகவும் கூறி உள்ளார்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், தடுக்கப்பட்டதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ள செம்மலை, அப்போது கூட இயக்கத்துக்காக தொடர்ந்து பணியாற்றி வந்ததாகவும், இப்போது உருவாகி உள்ள சூழ்நிலைகளை பார்க்கிற போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க மனம் இடம் தரவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவங்களால் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்து உள்ள செம்மலை, ‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா? நோகுதய்யா; மனசு நோகுதய்யா” என்று கூறி, கட்சியின் இரு பெரும் தலைவர்களிடம் மன்னிப்பு கோருவதாக தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி என்ற இடத்தையும் அ.தி.மு.க இழந்த நிலையில், அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டதாக தகவல்கள் பரவின. இதனை அ.தி.மு.க சார்பிலும், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கிற சில கட்சிகளும் உறுதி செய்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அ.தி.மு.க மூத்த தலைவர்கள் சட்டமன்றத்துக்கு உள்ளேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

அ.தி.மு.க கொறடா நியமிப்பு விவகாரத்தில், இ.பி.எஸ் ஸின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவுமாக சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க விற்கு ஆதரவாக வாக்களித்த சில எம்.எல்.ஏ க்களை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த சூழலில், அ.தி.மு.க வில் உட்கட்சி பூசல் தலைதூக்கி தாண்டவமாடிக் கொண்டு இருக்கும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான செம்மலை வெளியேறுவதாக அறிவித்து உள்ளது கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: