தி.மு.க தான் இப்போதும் ஆட்சியில் இருக்கு' - பகீர் கிளப்பிய மு.க. ஸ்டாலின் !!!
நாம் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறோம் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் விழா ஒன்றில் பேசியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
தஞ்சையில் இன்று (மே 18) நடைபெற்ற திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், இல்ல திருமண விழாவில் தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியுற்றதை முன் வைத்து, பலர் தி.மு.க -வின் கதை முடிந்து விட்டதாக கூறி வருகிறார்கள். ஆனால், தி.மு.க இதுவரை எத்தனையோ தேர்தலை பார்த்துள்ளது. பல தேர்தல்களில் தி.மு.க வெற்றியை கண்டு உள்ளது. அதேபோல், பல தேர்தல்களில் தோல்வியையும் சந்தித்து உள்ளது. ஆனால், தோல்வி அடையும் நேரத்தில் தான், தி.மு.க ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டும் நிமிர்ந்து எழுந்து நிற்கிறது.
இங்கு பேசியவர்கள் பலர் சோகத்தில் இருப்பதை நான் பார்க்கிறேன். மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, எதிரில் இருக்கக் கூடியவர்களும் சோகத்தில் உள்ளனர். நாம் சோகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் தான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறோம்.
நம்முடைய 5 ஆண்டு கால ஆட்சியின் போது, அனைத்து தரப்பு மக்களுக்குமான பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றினோம். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க -விடம், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தேன்.
நாம் வைத்த கோரிக்கை, இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு இருப்பதை நம்மால் கண் கூடாகப் பார்க்க முடிகிறது. நம்முடைய இந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வரை, நாம் தான் தமிழ்நாட்டை ஆளுகிறோம் என அர்த்தம். எனவே, இந்த தேர்தலில் தி.மு.க தோல்வியுற்றதைக் கண்டு நான் சிதறி போகவில்லை; மனம் உடைந்தும் போகவில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஓர் குழுவை தயார் செய்து உள்ளோம். இந்த ஆய்வில் நம்மிடம் உள்ள குறை என்ன ? மக்களின் எதிர்பார்ப்பு என்ன ? ஏன் இந்த தோல்வி ? என்பதை ஆராய்ந்து வருகிறோம். இதற்காக, 'உடன் பிறப்பே வா' என்கிற இணையத்தை உருவாக்கி உள்ளோம். அதில், அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
எந்த பணியையும் செய்யாமல் த.வெ.க ஆட்சிக்கு வந்து உள்ளது. வாக்காளர்களைச் சந்திக்கவில்லை, பூத் ஏஜெண்ட்டுகள் அமைக்கப்படவில்லை, கவுண்டிங் ஏஜெண்ட் கூட அவர்களுக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் ஆட்சி அமைத்து உள்ளார்கள். அவர்கள் இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்து உள்ளார். குறிப்பாக, சிறுவர்களை பரப்புரை செய்ய வைத்து ஆட்சியைப் பிடித்து இருக்கிறார்கள்.
இங்கு நம்முடைய கணிப்பு சரியாக வேலை செய்யவில்லை. வரும் நாட்களில் இதையும் முறியடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாகக் கருதி, தி.மு.க பாடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது" என தெரிவித்தார்.

0 கருத்துகள்: