வேலைக்கு ஒழுங்காக வராததால் நீக்கம்: ஒப்பந்ததாரரை கல்லை தூக்கி அடித்த தொழிலாளி !!!
கோவை இருகூர், டி.எஸ்.கே. நகர், பகுதியில் வசித்து வருபவர் ரங்கசாமி என்ற சீனிவாசன் (38). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவை நீலிகோணம்பாளையம், அருப்பையா கவுண்டர் வீதியைச் சேர்ந்த ரஞ்சித் (23) என்பவரின் நண்பரான மணிகண்டன் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். மணிகண்டன் வேலைக்கு ஒழுங்காக வராததால், அவரை ரங்கசாமி வேலையை விட்டு நீக்கினார். இதனால் ரங்கசாமி மீது மணிகண்டனுக்கு கடும் ஆத்திரம் இருந்தது.
இந்த நிலையில், ரங்கசாமி மற்றும் அவரது நண்பர் ரவிச்சந்திரன் ஆகியோர் காந்தி நகர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி - இருகூர் ரோட்டில் உள்ள ஈஷா ஒயின் ஷாப் அருகில் மது குடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பரான ரஞ்சித் ஆகியோர் ரங்கசாமியிடம் தகராறு செய்து, அசிங்கமாக திட்டினர். மேலும், அருகில் கிடந்த கல்லை எடுத்து ரங்கசாமியின் தலை, நெஞ்சு, கால் மற்றும் மர்ம உறுப்புகளில் பலமாக தாக்கினர். இதைப் பார்த்து தடுக்க வந்த நண்பர் ரவிச்சந்திரனையும் அடித்து, சட்டையைக் கிழித்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர்.
இதுகுறித்து ரங்கசாமி கொடுத்த புகாரின் பேரில் சிங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கறிக்கடையில் வேலை பார்த்து வரும் ரஞ்சித்தை (23) கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பெயிண்டர் மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்: