வாடகை தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து: தொழிலாளி கைது !!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், எஸ்.ஒகையூர், காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 21). இவர் கோவை வேலண்டிபாளையம் மருதகோனார் வீதி, கலாமன்றம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடன் ஜோஸ் என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில், ஜோஸ் வீட்டின் வாடகை பணத்தை செல்வகுமாரிடம் சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.
இதற்கு இடையே, மொபைல் கடையில் வேலை பார்த்து வரும் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (22) என்பவர் தனது நண்பரான ஜோஸிற்கு ஆதரவாக பேச முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து, இந்த வாடகை பிரச்சினையை பேசி தீர்க்க வேலண்டிபாளையத்தில் உள்ள அந்த அறைக்குச் சென்றார்.
அப்போது, வேலை முடிந்து அங்கு வந்த செல்வகுமாருக்கும், சஞ்சய்க்கும் இடையே வாடகை தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், சஞ்சய்யை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அங்கு இருந்த பீர் பாட்டிலை உடைத்து சஞ்சய்யின் கழுத்தின் இடது பக்கத்தில் சரமாரியாக குத்தினார். இதில் சஞ்சய்க்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் சாயிபாபா காலனி போலீசார் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

0 கருத்துகள்: