தமிழ்நாட்டின் முதல் பெண் தொழில்துறை அமைச்சரானார் கீர்த்தனா !!!
தமிழ்நாட்டின் முதல் பெண் தொழில்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்று உள்ளார் கீர்த்தனா.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து உள்ளது. இதை அடுத்து, த.வெ.க தலைவர் விஜய் மே 10 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருடன் சேர்த்து கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்ற செங்கோட்டையன், தி.நகர் தொகுதி வெற்றி பெற்ற என்.ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற சி.டி.ஆர் நிர்மல் குமார், எழுப்பூரில் வெற்றி பெற்ற ராஜ்மோகன், திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற அருண்ராஜ், மயிலாப்பூரில் வெற்றி பெற்ற வெங்கட்ராமன், காரைக்குடியில் வெற்றி பெற்ற பிரபு, சிவகாசியில் வெற்றி பெற்ற கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கப்படாததால், அரசு நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், கோப்புகள் தேக்கம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் த.வெ.க அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில்துறை மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் ஒரே பெண் கீர்த்தனா, தமிழ்நாட்டின் முதல் பெண் தொழில் துறை அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார்.
29 வயதே ஆன இவர் சட்டப்பேரவை தேர்தலில், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே, சிவகாசி தொகுதியில் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர் என்ற பெருமை பெற்ற கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடைய தொழில்துறையின் பெரும் பொறுப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் கீர்த்தனாவை நம்பி ஒப்படைத்து உள்ளார்.
அதாவது கடந்த தமிழக அரசியல் வரலாற்றிலேயே பெண் ஒருவர் தொழில்துறை அமைச்சராக இருந்ததில்லை. 1991 ஆண்டு சின்னசாமி தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எம்.சி சம்பத், தங்கமணி, தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா வரை தொழில்துறையைக் கவனித்தவர்கள் ஆண் அமைச்சர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக, தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2024 செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, முதல் முறையாக ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கோவி. செழியன் உயர் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை, ஆட்சிப் பணி, காவல் பணி, மாற்றுத் திறனாளிகள் துறை, முதியோர் நலன், பெண்கள் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம் ஆகிய துறைகள் முதலமைச்சர் விஜயின் கைவசம் உள்ளது.
மேலும், அமைச்சர் என். ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர் வளத் துறையும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப் பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், அமைச்சர் அருண்ராஜுக்கு சுகாதாரம், குடும்ப நலன், மருத்துவக் கல்வித் துறையும், அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடிமைப் பொருள் விநியோகத் துறையும், அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறையும், அமைச்சர் பிரபு-வுக்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அடங்கிய இயற்கை வளங்கள் துறையும் வழங்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: