பொன்ராஜின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு !!!
த.வெ.க பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக முதலமைச்சர் விஜய் அளித்த புகாரின் பேரில் பதிவான வழக்கில், முன் ஜாமின் கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பெண் தொண்டர்கள் ஆதரவாக பேசிய பேட்டிகள் குறித்து அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
அதில், த.வெ.க பெண் தொண்டர்கள் குறித்து இழிவாக பேசியதாக த.வெ.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், த.வெ.க நிர்வாகிகள் டி.ஜி.பி அலுவலகத்திலும், மாநகர காவல் ஆணையாரிடமும் புகார் அளித்து இருந்தனர். மேலும், கடலூர் மாவட்ட த.வெ.க செயலாளரும், அமைச்சருமான பி. ராஜ்குமார், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில், பொன்ராஜ்-க்கு எதிராக சென்னை சைபர் குற்றப் பிரிவும், கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், இவ்வழக்குகளில் முன் ஜாமின் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஒரே சம்பவத்துக்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சமூக வலைத்தளங்களில் வெளியான பெண் தொண்டர்கள் தெரிவித்த கருத்துக்களை கண்டிக்கும் வகையிலேயே மனுதாரர் கருத்து தெரிவித்தார்.
அதற்காக தற்போதைய முதலமைச்சர் நேரில் சென்று டி.ஜி.பி-யிடம் மார்ச் 26-ல் அளித்த புகாரில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மே 12 ஆம் தேதி தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்டு எந்த பெண்ணுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதால், முன் ஜாமின் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “பல பதவிகளை வகித்துள்ள மனுதாரர், ஒரு கட்சிக்கு ஆதரவான பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். அந்த கட்சித் தலைவர் மீதுள்ள அன்பின் காரணமாக பெண்கள் தெரிவித்த கருத்தை விமர்சிக்க மனுதாரருக்கு எந்த அவசியமும் இல்லை.
அவரது சர்ச்சைப் பேட்டி சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்றும் பரவிக் கொண்டு தான் உள்ளது. சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கினால், இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என்பதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி ஆர். சக்திவேல், “மனுதாரின் பேச்சு யூடியூபில் இருந்து நீக்கட்டு விட்டதால், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடத்தி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாமே? அவர் என்ன தலைமறைவாகி விட போகிறாரா?“ என காவல்துறை தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பொன்ராஜின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

0 கருத்துகள்: