செவ்வாய், 19 மே, 2026

வீரப்பனை கொன்ற அதிரடிப்படை எஸ்.ஐ க்கள் பெற்ற பலன்களை திரும்ப பெறக் கூடாது; நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!!

SHARE

 வீரப்பனை கொன்ற அதிரடிப்படை எஸ்.ஐ க்கள் பெற்ற பலன்களை திரும்ப பெறக் கூடாது; நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!!

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடித்த அதிரடிப் படையில் பணி புரிந்து, பதவி உயர்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களின் பலன்களை திரும்ப பெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் கடந்த 2004-ல் சிறப்பு அதிரடிப் படையால் கொல்லப்பட்டனர். இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட அதிரடிப் படையின் பல்வேறு நிலைகளில் பணி புரிந்த 900-க்கும் மேற்பட்டோருக்கு ஒரு படி நிலை விரைவுப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 16 காவலர்கள் எஸ்.ஐ-களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் பதவி உயர்வு பெற்ற நேரத்தில், தற்காலிக அடிப்படையில் பணி புரிந்து வந்ததால் 2009-ல் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், இந்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை அடுத்து, அவர்கள் உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், விரைவுப் பதவி உயர்வு என்பது ஒரு படிக்கு மட்டுமே என்பதால், எந்த நிலையிலும் அது ஒரு தனி நபருக்கு விரைவான தொடர் பணி மூப்பை வழங்காது. பதவி உயர்வு பெற்ற மேல்முறையீட்டாளர்கள், பதவி உயர்வு வழங்கப்பட்ட நேரத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்ததால் பதவி இறக்கம் செய்யப்பட்டனர்" என வாதிடப்பட்டது.

அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களுக்கு 2004-ல் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் மாநில அரசால் தவறாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சந்தனக் கடத்தல் வீரப்பனை கொன்ற சிறப்பு அதிரடிப்படையில் மனுதாரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அபாயகரமான நடவடிக்கைகளில் பங்கேற்று உள்ளனர்.

இதனால் மனுதாரர்களுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றிய காலத்தில், பதவி உயர்வு பெற்ற நாளில் இருந்து அவர்கள் பெற்ற அனைத்துப் பலன்களையும் மாநில அரசு திரும்பப் பெறக் கூடாது” என உத்தரவிட்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: