அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி என்பது கிசுகிசு; தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை என்கிறார் திருமாவளவன் !!!
அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி என்பது வெறும் கிசுகிசு தான் என மீண்டும் குட்டையை குழப்பி உள்ளார் திருமாவளவன்.
சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க, தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து உள்ளது. த.வெ.க பெரும்பான்மை இல்லாமல் தவித்த போது, தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்க முயன்றதாகவும், தன்னை முதலமைச்சராக முயற்சி நடந்ததாகவும் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் அளித்து இருந்தார்.
இந்த விவகாரம் அ.தி.மு.க , தி.மு.க விற்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க தி.மு.க கூட்டணி என்பது வதந்தி தான். அதுகுறித்து அதிகாரப் பூர்வமாக தலைவர்கள் யாரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி குறித்து தலைவர்கள் யாரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. பொதுவெளியில் பரவலாகப் பேசப்பட்ட கிசுகிசுக்களின் அடிப்படையில் தான் கூட்டணி குறித்தான கருத்தை நான் தெரிவித்தேன். அ.தி.மு.க தி.மு.க கூட்டணி என்பது வெறும் வதந்திதான். அது தனிப்பட்ட இரு கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் இல்லை.
மேலும், த.வெ.க ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை மட்டுமே நாங்கள் வழங்கி உள்ளோம். அதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியோ, மீண்டும் ஒரு தேர்தலோ வந்து விடக் கூடாது என்பது தான். அதேபோல, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், வி.சி.க வின் 2 இடங்களால் ஒரு ஆட்சி அமைவது தடைபட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டையும் நாங்கள் பெற்று விடக் கூடாது என்பதற்காகவே த.வெ.க விற்கு ஆதரவு தெரிவித்தோம். இதற்காக, எந்த சூழலிலும் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் எனவும் கூறி உள்ளோம்.
ஆனால், எங்கள் கட்சியின் முன்னணி தலைவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென தற்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். தலைவர் என்கிற முறையில் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என நான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், அ.தி.மு.க தி.மு.க கூட்டணி குறித்து என்னை யாருமே அதிகாரப் பூர்வமாக அணுகவில்லை. நலன் விரும்பிகள் இதுகுறித்து பேசினார்கள். அரசியல் வட்டாரத்தில் கூட்டணி குறித்து ஒரு கருத்து பரிமாற்றம் நிகழ்கிறது என்று தான் என்னிடம் கூறினார்கள். அரசியலில் இதெல்லாம் நடக்கத் தான் செய்யும்.
அதேபோல, எந்த தரப்பில் இருந்தும் அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி என்கிற முடிவை எடுத்து உள்ளோம், அதற்கு ஆதரவு தாருங்கள் என்று என்னிடம் கூறவோ, என்னைக் கட்டாயப்படுத்தவோ இல்லை. அதேசமயம் ஏன் ஒரு தலித் முதலமைச்சர் ஆகக் கூடாது என எனது நலன் விரும்பிகள் பேசினார்கள் அவ்வளவு தான். முதலிலேயே அதை நான் நிராகரித்து விட்டேன். பொதுவெளியில் பரவலாக பேசப்பட்ட பிறகு தான் கூறுகிறேன். அது முற்றிலும் மறைக்க கூடிய விஷயமும் அல்ல.
கூட்டணியில் இருந்தாலும், த.வெ.க விற்கு ஆரம்பத்திலேயே ஆதரவு வழங்குவது தவறில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்து விட்டோம். ஆனால், இடதுசாரிகள் அறிவித்த உடனே வி.சி.க வும் அறிவிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எந்த ஒரு முடிவையும் நான் தனிப்பட்ட முறையில் எடுக்க முடியாது. கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிறகு தான் எடுக்க முடியும். அதனாலேயே கால அவகாசம் எடுத்துக் கொண்டோம். உடனே, காலதாமதம் செய்கிறார்கள், பேரம் பேசுகிறார்கள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
வி.சி.க விற்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. த.வெ.க வில் அப்படியான தொடர்புகளும் வி.சி.க வுக்கு இல்லை. த.வெ.க எங்களை தொடர்பு கொண்ட போது கூட நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாகவே கூறினோம். பதவி ஆசை என்றால் காங்கிரஸ்-க்கு முன்பாகவே நான் த.வெ.க விடம் சென்றிருக்க முடியாதா?
கடந்த காலங்களில் த.வெ.கவை பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளைகள் என நானே விமர்சித்து உள்ளேன். தி.மு.க கூட விமர்சிக்காத நிலையில் விஜய்யையும், சீமானையும் வி.சி.க விமர்சித்து உள்ளது. ஆனால், விமர்சனம் என்பது வேறு, ஆதரிப்பதாக எடுத்து இருக்கும் முடிவு என்பது வேறு. நெருக்கடி நிலையில் மட்டுமே த.வெ.க விற்கு ஆதரவளிக்கிறோம். அதேசமயம் த.வெ.க வின் மீதான விசிகவின் விமர்சனம் அப்படியே தான் உள்ளது” என்றார் அவர்.

0 கருத்துகள்: