10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ; மே 20-ம் தேதி வெளியிடப்படும் - தமிழக அரசு அறிவிப்பு !!!
கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்து உள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதனை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 10-ம் பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பாகவும், கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்தும், பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என மத்திய அரசு கூறி உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, 2026-27 கல்வி ஆண்டிற்கான 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டு உள்ள பாடப் புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியபோது," நாளை (மே 20) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 1-ம் தேதி அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், இக்கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தும் நிலையில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி 01.06.2026 முதல் 03.06.2026 வரை நடைபெறும்.
வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு உள்ளதா ?என்பது குறித்து அப்போதைய சூழ்நிலையை பொறுத்து முதலமைச்சர் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
த.வெ.க வின் கொள்கையே இரு மொழிக் கொள்கைதான் எனவும், உறவோடு பேச தாய்மொழி, உலகத்துடன் பேச ஆங்கில மொழி என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
பள்ளிகள் திறந்தவுடன் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் வகையில், தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பபட்டு தயார் நிலையில் வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள துறை அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தக பைகள் ஆகியவற்றை மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்று கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) மாணவர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியவை தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் (Septic Tanks), கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு EMIS வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

0 கருத்துகள்: