தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள்; வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய் !!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தில், அந்தந்த துறைகளின் அலுவலகத்தில் பொறுப்பெற்று கொண்டனர்.
நிதித் துறை அமைச்சர் செங்கோட்டையனும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்தும் முதல்வர் விஜய் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 10-ஆம் தேதி, தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். இதை அடுத்து அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அமைச்சர் என்.ஆனந்த்திற்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறையும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், அமைச்சர் அருண்ராஜுக்கு சுகாதாரம், குடும்ப நலன், மருத்துவக் கல்வித் துறையும், அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், அமைச்சர் வெங்கடரமணனுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடிமைப் பொருள் விநியோகத் துறையும் ஒதுக்கப்பட்டன.
இதேபோல், அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறையும், அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையும், அமைச்சர் பிரபுவுக்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அடங்கிய இயற்கை வளங்கள் துறையும், அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அருண்ராஜுக்கு தலைமைச் செயலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் துறை சார்ந்த அதிகாரிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர் லோசனை மேற்கொண்டார். அப்போது, சென்னையில் குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் தொற்று நோய் பரவுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல், பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட என்.ஆனந்திற்கு அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பொது மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் என்.ஆனந்த் உறுதி அளித்தார்.
முன்னதாக, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்தை முதல்வர் விஜய் இருக்கையில் அமர வைத்து இனிப்பை ஊட்டி வாழ்த்தினார். இதேபோல் நிதித்துறை அமைச்சர் செங்கோட்டையனையும் அவருடைய இருக்கையில் முதல்வர் அமர வைத்தார்.

0 கருத்துகள்: