வெள்ளி, 15 மே, 2026

ஒருநாள் தாமதமாக வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ - கோவையில் திருநீறு பூசி, கையில் பட்டாசு சுழற்றி ரசிகர்கள் ‘வெறித்தனம்’ கொண்டாட்டம் !!!

SHARE

 ஒருநாள் தாமதமாக வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ - கோவையில் திருநீறு பூசி, கையில் பட்டாசு சுழற்றி ரசிகர்கள் ‘வெறித்தனம்’ கொண்டாட்டம் !!!

​பால் அபிஷேகம்; கறுப்பு சட்டை அணிந்து முழக்கமிட்ட ரசிகர்கள் - ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு !!!

 பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து, கோவை துடியலூர் பகுதியில் சூர்யா ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பேனர்களுக்குப் பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

​ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான சூர்யா, த்ரிஷா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில், சாய் அபயங்கர் இசை அமைப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘கருப்பு’. இத்திரைப்படம் நேற்று (மே 14) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதியில் ‘திடீர்’ தடை ஏற்பட்டது. 

இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், தடைகள் நீங்கி இன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து உற்சாகத்தின் எல்லைக்கே சென்றனர்.

​அதன் ஒரு பகுதியாக, கோவை துடியலூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற முருகன் திரையரங்கில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று மாலை பிரம்மாண்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சூர்யாவின் மெகா பேனருக்குப் பால் அபிஷேகம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

அதில் வித்தியாசமான முறையில் பலரும் கறுப்பு நிறச் சட்டை அணிந்து வந்து, ஒருவருக்கொருவர் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு, "கருப்பா... கருப்பா..." என்று தியேட்டரே அதிரும் வகையில் முழக்கமிட்டு ‘மாஸ்’ காட்டினர். தொடர்ந்து, தியேட்டர் வாசலில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடிய போது, ரசிகர் ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் எரியும் பட்டாசைத் தனது கையில் பிடித்தவாறே நாலாபுறமும் சுழற்றி ரகளையில் ஈடுபட்டார். இதனால் ‘பயம்’ கலந்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் சக ரசிகர்கள் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

​இதனைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் ‘மெகா’ கேக் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நேற்று ஏமாற்றமடைந்த சூர்யா ரசிகர்கள் இன்று ‘கருப்பு’ ரிலீஸை திருவிழா போலக் கொண்டாடி தீர்த்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: