திங்கள், 25 மே, 2026

விவசாயி உயிரிழந்த சம்பவம்; காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு !!!

SHARE

 விவசாயி உயிரிழந்த சம்பவம்; காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு !!!

காவல் ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்த விவசாயி அந்தோணி ராஜ் விஷமருந்தி விபரீத முடிவை எடுத்தார். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 63). இவருக்கும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் பேச்சிப்பாண்டி என்பவரது மனைவி பசுபதி (வயது 37) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பசுபதி அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய சிவகிரி காவல் துறையினர், பிரச்சனைக்குரிய இடத்தை சர்வேயர் மூலம் அளவிட்டு உள்ளனர்.

அதன் பின்னரும், பிரச்சனை இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வுக் காணுமாறும் அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இடத்தில் அந்தோணிராஜ் தரப்பினர், கட்டுமான பணிகளை மேற்கொண்டு பிரச்சனை செய்வதாக பசுபதி தரப்பினர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து, மீண்டும் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திய காவல் துறையினர், நிலத்தை அளவீடு செய்யும் வரை கட்டுமான பணியை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்து உள்ளனர்.

இந்த சூழலில் கடந்த மே 21- ஆம் தேதி அன்று விவசாயி அந்தோணிராஜை விசாரணைக்காக அழைத்த சிவகிரி காவல் நிலையத்தின் ஆய்வாளர் முரளிதரன், அவரை அடித்ததாகவும், திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்தோணிராஜ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவர் உடனடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று (மே 24) உயிரிழந்தார்.

விவசாயி உயிரிழந்ததை அடுத்து அந்தோணிராஜின் உறவினர்கள் நேற்று சிவகிரி காவல் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முரளிதரன் காத்து இருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அத்துடன், காவல் ஆய்வாளர் முரளிதரன், காவலர்கள் கனகராஜ், முத்து ஆகிய மூன்று பேர் மீதும் sec:176/26, sec:296 (6), sec:115(2), sec:108 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு உள்ளது.

விவசாயி விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: