சனி, 30 மே, 2026

த.வெ.க வின் குதிரை பேரம் குறித்து சி.பி.ஐ விசாரணை - ஆளுநரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை !!!

SHARE

 த.வெ.க வின் குதிரை பேரம் குறித்து சி.பி.ஐ விசாரணை - ஆளுநரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை !!!

தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகமாக மாற்றி உள்ள த.வெ.க அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், த.வெ.க வின் குதிரை பேரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆளுநரிடம் அ.தி.மு.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக தேர்தலில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த தேர்தலில், தி.மு.க 59 இடங்களிலும் அ.தி.மு.க 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.

சட்டப் பேரவையில் த.வெ.க அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர், த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அ.தி.மு.க வில் உட்கட்சி பூசல் நிலவியது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏ க்கள் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜிநாமா செய்து விட்டு த.வெ.க வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த சூழலில் பதவியை ராஜிநாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் தமிழக வெற்றி கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், குதிரை பேரம் மூலம் மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ க்களை விலை கொடுத்து வாங்க சிலர் முயற்சி செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாநிலங்களவை அ.தி.மு.க உறுப்பினர் தனபால் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்ந புகார் மனுவில், தமிழக அரசியல் இதுவரை கண்டிராத வகையில், தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகம் போல மாற்றி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குறி வைத்து ஆளுங்கட்சி நடத்தும் குதிரை பேரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

குதிரை பேர நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சட்டப் பேரவை செயலாளரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புகார் மனு அளித்த பிறகு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "குதிரை பேரம் மூலம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசிக் கொண்டு இருக்கும் த.வெ.க வின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு ஆளுநரிடம் புகார் மனு அளித்து உள்ளோம். குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 167-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் மனு அளித்து உள்ளோம்.

தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகமாக மாற்றிய தமிழக வெற்றி கழகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் மனு அளித்து உள்ளோம். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: